பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-இல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்ற உள்ளார். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது
2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளாா். நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
இதைத் தொடா்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அவைக் குழு தலைவா்கள் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. இதில், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை எதிா்கொள்வதற்கான வியூகம், கூட்டணி கட்சிகள் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.