அசாமில் 10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தோல்வி; 34 பள்ளிகளை மூட முடிவு

அசாமில் அரசால் நடத்தப்படும் 34 பள்ளிகளில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வாரிய தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், பள்ளிகளை மூட அரசு முடிவு செய்து உள்ளது.
கவுகாத்தி,
அசாமில் அரசால் நடத்தப்படும் பல பள்ளி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அசாம் கல்வி துறை வெளியிட்டுள்ள செய்தியில், அரசால் நடத்தப்படும் 34 பள்ளிகளில் படித்து வந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டில் 10-ம் வகுப்பு வாரிய தேர்வில் கலந்து கொண்டனர்.
ஆனால், ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை என தெரிவித்து உள்ளது. அசாம் கல்வி மந்திரியான ரனோஜ் பெகு கூறும்போது, பூஜ்ய தேர்ச்சி விகிதம் கொண்ட இந்த பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணம் செலவிடுவது என்பது அர்த்தமற்றது என கூறியுள்ளார்.
இதுதவிர, மிக குறைவான எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பல பள்ளிகளும் உள்ளன. மாணவர்களே இல்லையெனில் பள்ளிகள் எப்படி இயங்கும்? ஒரு சில பள்ளி கூடங்களில் 2 முதல் 3 மாணவர்களே உள்ளனர். பள்ளி கூடங்களின் முதன்மை பணியே, கல்வியில் பங்காற்றுவது ஆகும்.
ஆனால், ஒரு பள்ளியின் வாரிய தேர்வில் தேர்ச்சி முடிவு பூஜ்யம் என்றால், பின்னர் அந்த பள்ளி இல்லாமல் இருப்பதே நன்று என அவர் கூறியுள்ளார். இதனால், அந்த பள்ளிகளை பிற பள்ளிகளுடன் இணைக்க கூடிய முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.