காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை வழங்க ரூ.42 கோடி ஒதுக்கீடு-பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை


காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை வழங்க ரூ.42 கோடி ஒதுக்கீடு-பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:45 PM GMT)

பெங்களூரு மாநகராட்சியில் காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை விடுவிக்க ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் வரையிலான பணிகளுக்கு பணம் வழங்கும் வேலை தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கவர்னரிடம் புகார்

பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வரும் காண்டிராக்டர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணம் விடுவிக்கப்படவில்லை. மாநகராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதால், அதுகுறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடியும் வரையும், வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து முடிக்கும் வரையும் காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை விடுவிக்கப்படாது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறி இருந்தார்.

இதற்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒப்பந்த தொகையை விடுவிக்க கோரியும், அந்த பணத்தை விடுவிக்க துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் லஞ்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் ஒப்பந்த தொகையை விடுவிக்க கோரி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டையும் காண்டிராக்டர்கள் சந்தித்து புகார் அளித்திருந்தனர்.

ரூ.42 கோடி ஒதுக்கீடு

இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட காண்டிராக்டர்களுக்கு ஒப்பந்த தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.25 லட்சம் வரையிலான வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட சிறிய காண்டிராக்டர்களுக்கு மட்டும் இந்த ஒப்பந்த தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பெங்களூரு மாநகராட்சி ரூ.42 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதன்படி, ரூ.25 லட்சத்திற்கும் குறைவான மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்திருந்த காண்டிராக்டர்களுக்கு தலா 3 பில்கள் மட்டும் வழங்கப்படும் என்று தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சியில் காண்டிராக்டர்கள் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டதற்காக, இதுவரை ரூ.6 ஆயிரம் கோடிக்கும் மேல் ஒப்பந்த தொகை வழங்கப்படாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த திட்டங்களின்படி வளர்ச்சி பணிகளை காண்டிராக்டர்கள் மேற்கொண்டு இருந்தனர். அதன்படி, காண்டிராக்டர்களுக்கு ரூ.6,143 கோடியை கொடுக்காமல் மாநகராட்சி பாக்கி வைத்திருப்பதாக காண்டிராக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.


Next Story