கர்நாடகம் முழுவதும் தொடங்கப்பட உள்ள நம்ம கிளினிக் திட்டத்திற்காக ரூ.103 கோடி ஒதுக்கீடு; மந்திரி சுதாகர் தகவல்


கர்நாடகம் முழுவதும் தொடங்கப்பட உள்ள நம்ம கிளினிக் திட்டத்திற்காக ரூ.103 கோடி ஒதுக்கீடு; மந்திரி சுதாகர் தகவல்
x

கர்நாடகம் முழுவதும் தொடங்கப்பட உள்ள நம்ம கிளினிக் திட்டத்திற்காக ரூ.103 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

அரசு மீது பொய் குற்றச்சாட்டு

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், அரசு மீது தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். உண்மை நிலைமையை சமாதி செய்ய காங்கிரஸ் முயற்சிக்க வேண்டாம். காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி மக்களிடம் அனுதாபத்தை பெற்று விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. இனிமேலும் காங்கிரஸ் தலைவர்கள் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திவிட்டு உண்மையை பேச வேண்டும். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தியதாக கூறி வருகிறார்.

ரூ.103 கோடி ஒதுக்கீடு

தேர்தல் சந்தர்ப்பத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 40 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருந்தது. ஆனால் தாங்கள் சொன்னபடி நடந்து கொண்டோம் என்று மக்களிடம் தவறான தகவல்களை சித்தராமையா கூறி வந்தார். சொன்னபடி நடந்து கொண்டோம் என்று பொய் பிரசாரம் செய்ததால், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைய நேரிட்டது. மக்களும் காங்கிரசை புறக்கணித்தனர். தற்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

அவரது சிறப்பான திட்டங்களில் ஒன்று தான் நம்ம கிளினிக். இந்த திட்டத்தின்படி கர்நாடக மாநிலம் முழுவதும் 438 நம்ம கிளினிக் தொடங்கப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள நகர பகுதிகளில் இந்த திட்டம் செயல்பட உள்ளது.பெங்களூருவில் உள்ள 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்பட இருக்கிறது. கூடிய விரைவில் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்பட உள்ளது. நம்ம கிளினிக் திட்டத்திற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.103.73 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story