குழந்தையுடன், ஆஸ்திரேலியாவில் வாழ பெண்ணுக்கு அனுமதி
கணவருடன் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு, அவரது குழந்தையுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதி வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு-
ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்
மண்டியாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2006-ம் ஆண்டு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். மேலும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு குடும்ப நல கோர்ட்டு அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கி இருந்தது. அப்போது மாதம் ஒரு முறை, குழந்தையை சந்திக்க தந்தைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு முறை கூட குழந்தையை வந்து, தந்தை பார்க்கவில்லை. அதே நேரத்தில் அந்த பெண், வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று விட்டார். குழந்தையை அழைத்து செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது குழந்தையுடன் ஆஸ்திரேலியாவில் தங்கி கொள்ளவும், குழந்தை அங்கு தங்குவதற்கான விசா பெறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பெங்களூரு கோர்ட்டில் மனு செய்திருந்தனர். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
ஐகோர்ட்டு அனுமதி
இதையடுத்து, அந்த பெண் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அந்த பெண் தரப்பில் ஆஜரான வக்கீல், மாதம் ஒரு முறை குழந்தையை வந்து சந்திக்க தந்தைக்கு அனுமதி வழங்கி இருந்தும், கடந்த 8 ஆண்டுகளாக அவர் வந்து சந்திக்கவில்லை. கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாயுடன், அந்த குழந்தை ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்க அனுமதிக்க வேண்டும், என்று வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி தாயுடன், அந்த குழந்தை ஆஸ்திரேலியாவிலேயே வசிக்க அனுமதி வழங்கி ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு பிறப்பித்துள்ளார்.