நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்: டி.ஆர்.பாலு பேட்டி


நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்: டி.ஆர்.பாலு பேட்டி
x

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர் என டி.ஆர்.பாலு கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் முழக்கங்களை எழுப்பினர்.

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதேபோல, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர்.அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுக்கிறார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர்.

நாளைக்கு எங்களையும் சஸ்பெண்ட் செய்வார்கள். அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது. விசாரணை நடத்துவதாக கூறுகின்றனர். என்ன விசாரணை நடத்த போகிறார்கள் என தெரியவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story