நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணியா?; தேவேகவுடா பரபரப்பு பேட்டி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு காட்டுங்கள்
நமது நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து என்னால் ஆழமாக விவரிக்க முடியும். ஆனால் அதனால் என்ன பயன்?. நாட்டில் பா.ஜனதாவுடன் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்து செயல்படாத ஏதாவது ஒரு கட்சியை எனக்கு காட்டுங்கள்?. அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சொல்லலாம்.
தமிழ்நாட்டில் பா.ஜனதாவுடன் தி.மு.க. 6 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தது. அவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லையா?. அதனால் தான் நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்கிறேன். அதே தேவை இல்லை. இந்த அரசியல் சூழ்நிலைகளை பிரதமராக, முதல்-மந்திரியாக, எம்.பி.யாக பார்த்துள்ளேன்.
கூட்டணி வைக்க...
மராட்டியத்தில் என்ன நடந்தது?. என்னால் பல்வேறு உதாரணங்களை கோடிட்டு கூற முடியும். பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் சேருவீர்களா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். யார் மதவாதி?, மதவாதமற்றவர் யார்? என்று எனக்கு தெரியாது. மதவாதம், மதவாதம் அல்லாதவைக்கு வரையறைகள் என்ன?. இதை என்னால் கூற முடியும்.
பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி வைக்க போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த விஷயங்கள் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். பணியாற்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன. எங்கள் கட்சி தான் எங்களுக்கு பலம். தொண்டர்கள் தான் எங்கள் கட்சியின் பலம். தொண்டர்களை ஒன்றுபடுத்தி அவர்களை ஊக்குவிக்கும் பணியை நாங்கள் செய்வோம்.
வலுப்படுத்துவோம்
மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை பலப்படுத்த நாங்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகள் பலமாக உள்ளன. அதே போல் கர்நாடகத்திலும் எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இளைஞர்களுக்கு அதிக பலம் கொடுத்து கட்சியை வலுப்படுத்துவோம்.
அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஒரு உயர்நிலை குழுவை அமைக்கும்படி கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எனக்கு தற்போது 91 வயதாகிறது. அதனால் நான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கேள்வி எழாது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
நாடாளுமன்ற தேர்தல்
மாவட்ட, தாலுகா, மாநகராட்சி தேர்தல்களில் நாங்கள் எங்களை நிரூபிக்க முயற்சி செய்வோம். அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்துவோம். எங்கள் கட்சிக்கு எங்கெங்கு பலம் உள்ளதோ அங்கு நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். நாங்கள் ஏற்கனவே கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தோம். இந்த விஷயத்தில் கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் குறித்தோ அல்லது காங்கிரஸ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. வருகிற தேர்தலில் கவனம் செலுத்துவதே எங்களின் நோக்கம். நாங்கள் அமைதியாக உட்கார மாட்டோம். எனக்கு 91 வயதானலும், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். பெங்களூரு மாநகராட்சி தேர்தல் பணிகளை தொடங்க வேண்டியுள்ளது. நான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்த தயாராக உள்ளேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.