983 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும்-மந்திரி பைரதி சுரேஷ் பேட்டி


983 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும்-மந்திரி பைரதி சுரேஷ் பேட்டி
x

கோலார் தங்கவயலில் 983 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கோலார், தங்கவயல்:-

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

கோலார் தங்கவயலில் வசித்து வரும் இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனர். இதனால் உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜனதா கட்சி கோலார் தங்கவயலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் தேர்தல் நேரத்தில் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் இதற்காக கோலார் தங்கவயலில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தநிைலயில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அளித்த வாக்குறுதிபடி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

தொழில் பூங்கா அமைக்க முடிவு

இதற்காக கோலார் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் 983 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் கோலாரில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து நேற்று கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதருடன், மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் ஆலோசனை நடத்தினார்.

நிலம் கையகப்படுத்த முயற்சி

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் கூறியதாவது:-

கோலார் தங்கவயலில் தங்கச் சுரங்கம் மூடிய பின்பு தாலுகா முழுவதும் இளைஞர்கள் வேலை தேடி பெங்களூரு மற்றும் வெளி மாநிலத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தாலுகா வாரியாக தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்து முயற்சிகள் நடந்து வருகிறது. கோலார் தங்கவயலில் பி.இ.எம்.எல். நிறுவனத்திடம் இருந்து பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. திட்டமிட்டப்படி 983 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றி தொழில் பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story