அக்னிபத் திட்டத்துக்கு எதிரான வன்முறை வருத்தமளிக்கிறது - அக்னிவீரர்களை வரவேற்கிறோம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட்


அக்னிபத் திட்டத்துக்கு எதிரான வன்முறை வருத்தமளிக்கிறது - அக்னிவீரர்களை வரவேற்கிறோம்:  ஆனந்த் மஹிந்திரா டுவீட்
x

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை மஹிந்திரா குழுமம், பணி அமர்த்த விரும்புவதாக மஹிந்திரா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரெயில்களுக்கு தீவைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தை வரவேற்று மஹிந்திரா குழுமம் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை மஹிந்திரா குழுமம், பணி அமர்த்துவதற்கான வாய்ப்பை வழங்க விரும்புவதாகவும், இப்போது நடைபெறும் வன்முறையால் வருத்தமடைந்துள்ளதாகவும் மஹிந்திரா கூறியுள்ளார்.

"அக்னிபத் திட்டத்தை சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது, நான் ஏற்கெனவே கூறினேன் திரும்பவும் சொல்ல விரும்புவது, அக்னிவீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள், அவர்களை சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாற்றும்.

அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது.

கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. தலைமைத்துவம், குழுவாக செயல்படுதல் மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னிவீரர்கள் தொழில்துறைக்கு தயாரான தொழில்முறை தீர்வுகளை வழங்குவார்கள்".

இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், ஆனந்த் மஹிந்திரா தெரிவித்த கருத்து இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.


Next Story