பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பரிதாபம்


பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பரிதாபம்
x

சிறுமி தற்கொலை செய்ய கடற்கரை சென்றுள்ளார். அங்கு அவரை மீட்டு சமாதானப்படுத்திய சிலரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

விசாகப்பட்டினம்,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டு வேலை செய்து வந்த இந்த சிறுமிக்கு அதேபகுதியில் வசித்து வரும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த இம்ரான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த மாதம் 17ம் தேதி சிறுமிக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, அன்றைய தினம் சிறுமி தனது ஆண் நண்பர் இம்ரான் உடன் பிறந்தநாள் கொண்டாட சென்றுள்ளார். அப்போது, இம்ரான் தனது நண்பனுடன் சேர்ந்து சிறுமியை ஆர்கே கடற்கரை அருகே உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியை இம்ரானும் அவரது நண்பனும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், மறுநாள் காலை சிறுமியை அவர் வேலைசெய்து வரும் பகுதியில் விட்டுச்சென்றனர்.

நண்பன் உள்பட 2 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சிறுமி கடலில் குதித்து தற்கொலை செய்யும் நோக்கோடு ஆர்கே கடற்கரைக்கு சென்றுள்ளார்.

தற்கொலை செய்ய கடற்கரைக்கு சென்ற சிறுமியை அங்கு இருந்த புகைப்பட கலைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறியுள்ளனர். இதனால், அவர்களின் பேச்சை சிறுமி நம்பியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திய புகைப்பட கலைஞர்கள் ராஜு, ஹரிஷ், நாகேந்திரா, கோபி ஆகியோர் சிறுமியை அருகில் உள்ள தங்கும்விடுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து 4 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களான ஸ்ரீனு, அசோக், நரேஷ், தாம்பே, ஈஸ்வர், பிரவீன் உள்பட மேலும் 7 பேரையும் தங்கும் விடுதிக்கு அழைத்துள்ளனர். அவர்களும் விடுதிக்கு வந்த நிலையில் மொத்தம் 11 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 22ம் தேதிவரை விடுதியில் வைத்து அந்த கும்பல் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளது.

பின்னர், 23ம் தேதி அந்த கொடூர கும்பலை சேர்ந்த நபர் சிறுமியை விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா அழைத்து சென்றார். அங்கு சிறுமியை போலீஸ் நிலையம் அருகே விட்டுவிட்டு தப்பிச்சென்றார்.

கையில் 200 ரூபாய் பணத்துடன் போலீஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சிறுமியை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாகப்பட்டின போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது, தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த போலீசார் ஜார்க்கண்ட், விசாகப்பட்டினத்தில் அதிரடி சோதனை நடத்தி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 11 பேரை கைது செய்தனர்.

எஞ்சிய 2 பேர் தலைமறைவான நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story