நேற்று சந்திரபாபு நாயுடு.. இன்று ஜெகன் மோகன்..பா.ஜ.க.வை வட்டமிடும் ஆந்திர அரசியல் கட்சிகள்


நேற்று சந்திரபாபு நாயுடு.. இன்று ஜெகன் மோகன்..பா.ஜ.க.வை வட்டமிடும் ஆந்திர அரசியல் கட்சிகள்
x

பிரதமர் மோடியை ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளும் பாஜக தனிப்பெருன்மையயுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்கின்றன.

எனினும், எதிர்க்கட்சிகள் பலம் அடைந்து விடக்கூடாது என்பதிலும் பா.ஜனதா கவனமாக உள்ளது. இதனால் பா.ஜனதா எங்கெல்லாம் வலுவாக இல்லையோ அங்கெல்லாம் கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

இதன் அடிப்படையில் ஆந்திராவிலும் தனது கூட்டணியை வலுப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சந்திரபாபு நாயுடு சந்தித்த நிலையில், இன்று ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி டெல்லிக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்றம் வருகை தந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஏற்கனவே மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கமான உறவையே கையாண்டு வரும் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை தற்போது சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆந்திராவில் உள்ள இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் பாஜக கூட்டணியில் சேர ஆர்வம் காட்டுவதையே இந்த அடுத்தடுத்த சந்திப்பு காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Next Story