ஆந்திரா: ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் மரகத விநாயகர் சிலை மீட்பு


ஆந்திரா:  ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் மரகத விநாயகர் சிலை மீட்பு
x
தினத்தந்தி 14 Jun 2022 12:13 PM IST (Updated: 14 Jun 2022 12:13 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் மரகத விநாயகர் சிலையை போலீசார் மீட்டனர்.

திருப்பதி,

ஆந்திரா மாநிலம், ஏர்ரகொண்ட பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவரது மருமகன் இந்திர சேனா ரெட்டி. இவர்களது விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியபோது 2 1/2 அடி உயரம்,2 அடி அகலம் கொண்ட 9 கிலோ எடையுள்ள பச்சைகல் மரகத விநாயகர் சிலை கிடைத்ததுள்ளது. இந்த சிலையின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதை அறிந்த போலீசார் அங்கு சென்று மரகத சிலையை அரசிடம் வழங்க வேண்டுமென கேட்டுள்ளனர்.ஆனால் ராஜசேகர் ரெட்டி மரகத சிலையை அரசிடம் வழங்க மறுத்துள்ளார்.

இதனால் மரகத சிலையை அரசிடம் வழங்க வேண்டுமென ஐதராபாத் கோர்ட்டில் ஆந்திர அரசு சார்பில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ராஜசேகர ரெட்டி இந்த சிலை தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் அதற்கு உரிமைப் பத்திரம் வழங்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மரகத விநாயகர் சிலை ராஜசேகர ரெட்டிக்கு சொந்தமானது என கோர்ட்டில் உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. இதையடுத்து மரகத விநாயகர் சிலையை ராஜசேகர் ரெட்டி வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில்,வீட்டில் சிலை வைத்துள்ளது உங்கள் குடும்பத்திற்கு ஆகாது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.உடனே பயந்து போன ராஜசேகர ரெட்டி அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரர் ரெட்டியிடம் கொடுத்து வினுகொண்ட சாலையில் உள்ள பண்ணை வீட்டில் சிலையை வைத்துள்ளார்.

இதையடுத்து மரகத விநாயகர் சிலையை விற்பனை செய்ய உள்ளதாக ஓங்கோல் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெங்கடேஸ்வரர் ரெட்டியின் பண்ணை வீட்டிற்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் சிலையை தாங்களே வாங்கி கொள்வதாகவும், சிலையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.அப்போது வெங்கடேஸ்வர ரெட்டி மரகத விநாயகர் சிலையை மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

அப்போது மாறுவேடத்தில் இருந்த போலீசார் தாங்கள் போலீசார் என தங்களது அடையாள அட்டையை காண்பித்து மரகத விநாயகர் சிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ராஜசேகர் ரெட்டி கோர்ட் வழங்கிய உரிமை பத்திரத்தை போலீசாரிடம் காண்பித்தார்.

ஆனால் புராதன சின்னமான மரகத விநாயகர் சிலையை தனிநபர் ஒருவர் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்து சிலையை அவரிடம் கொடுக்க மறுத்தனர்.மேலும்,போலீசார் ராஜசேகர் ரெட்டி, அவரது மருமகன் இந்திர சேனா ரெட்டி மற்றும் வெங்கடேஸ்வர் ரெட்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story