ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவிய 2 எம்.எல்.ஏக்கள்: ஆந்திர அரசியலில் பரபரப்பு


ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவிய 2 எம்.எல்.ஏக்கள்: ஆந்திர அரசியலில் பரபரப்பு
x

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் -சந்திரபாபு நாயுடு (கோப்பு படம் -பிடிஐ)

தினத்தந்தி 16 Dec 2023 3:21 AM GMT (Updated: 16 Dec 2023 3:22 AM GMT)

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய இரண்டு எம்.எல்.ஏக்கள், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளனர்.

அமராவதி,

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.எல்.சி ஆகியோர் நூற்றுக்கணக்கான தங்கள் ஆதரவாளர்களுடன் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். ஆந்திர மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் இப்போதிலிருந்தே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். எனினும்,இம்முறையும் தனித்தே போட்டியிடுவோம் என ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்.

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கு தேசம் - பவன் கல்யாண் கூட்டணியுடன் இணைந்து செயல்படலாம் எனவும் கூறப்படுகிறது. இம்முறை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை.

ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சி தாவும் படலம் தொடங்கி உள்ளது. நேற்று ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாட்டிகொண்டா தொகுதி எம்.எல்.ஏவான உண்டவல்லி தேவி, உதயகிரி எம்.எல்.ஏவான எம்.சந்திரசேகர ரெட்டி ஆகிய இருவரும் அமராவதியில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். மேலும், ஜெகன் கட்சியை சேர்ந்த முன்னாள் மேலவை உறுப்பினரான ராதாகிருஷ்ணய்யாவும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோருடன் ஊர்வலமாக வந்து தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தார். இது ஜெகன் மோகன் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story