பா.ஜனதா பிரமுகர் மீது மற்றொரு இளம்பெண் புகார்
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பா.ஜனதா பிரமுகர் மீது மற்றொரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கமகளூரு:-
மாணவி தற்கொலை
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா குதிரைமுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்தார். அதுதொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் போலீசிடம் சிக்கியது. அதில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரான நித்தீஸ் என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றியதாகவும், தற்போது திருமணத்துக்கு மறுப்பதாகவும் கூறி இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், தலைமறைவாக இருந்த நித்தீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நித்தீஸ் தன்னையும் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளம்பெண் குதிரேமுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கல்லூரி படித்து வரும் எனக்கும், நந்தீசுக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
கிடுக்கிப்பிடி விசாரணை
இதையடுத்து இருவரும் காதலித்து வந்தோம். அப்போது தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்தோம். இந்த நிலையில் அவர் என்னை விட்டு விலக தொடங்கினார். மேலும், திருமணத்துக்கும் மறுத்துவிட்டார். அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இளம்பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அவரிடம் கிடுக்கிப்பிடி
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.