கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்தது: இன்றுடன் வழக்குகள் முழுமையாக மாற்றப்படுகிறது
கர்நாடகத்தில் லோக்அயுக்தா செயல்பட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்துள்ளது. இன்றுடன் வழக்குகளை அனைத்தையும் முழுமையாக லோக் அயுக்தாவுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் லோக் அயுக்தா செயல்பட அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழல் தடுப்பு படை முடிவுக்கு வந்துள்ளது. இன்றுடன் வழக்குகளை அனைத்தையும் முழுமையாக லோக் அயுக்தாவுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக் அயுக்தாவுக்கு அதிகாரம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது லோக் அயுக்தாவின் அதிகாரத்தை குறைத்து ஊழல் தடுப்பு படை கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படைக்கு தடை விதித்தும், லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கியும் அதிரடி தீர்ப்பு கூறி இருந்தது.
கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோக் அயுக்தா செயல்பட முழு அனுமதி வழங்கி அரசும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, லோக் அயுக்தாவில் கடந்த 2 நாட்களாக ஊழல் தடுப்பு படையில் பணியாற்றிய மூத்த போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற தொடங்கினார்கள்.
ஊழல் தடுப்பு படை முடிவுக்கு...
இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்குகள் அனைத்தையும் லோக் அயுக்தாவுக்கு மாற்றும்படி லோக் அயுக்தா கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமந்த்குமார் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, ஊழல் தடுப்பு படையில் பதிவான வழக்குகள், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அனைத்தையும் லோக் அயுக்தாவுக்கு மாற்றும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் அனைத்து வழக்குகள், ஆவணங்கள் லோக் அயுக்தாவுக்கு மாற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் கர்நாடகத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு படை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஊழல் தடுப்பு படையில் பணியாற்றிய அனைத்து போலீசாரும், லோக் அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள்
இதையடுத்து, லோக் அயுக்தா முழு அதிகாரத்துடன் செயல்பட இருக்கிறது. லோக் அயுக்தா முழு அதிகாரத்துடன் செயல்படுவதால், ஊழல் மற்றும் பிற முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாாிகள், ஊழியர்கள் மீது புகார் அளிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கும் லோக் அயுக்தா போலீசார் தயாராகி வருகிறார்கள்.