மே.வங்க அரசு கடந்த காலங்களில் தசரா விழாவின் போது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது - பாஜக


மே.வங்க அரசு கடந்த காலங்களில் தசரா விழாவின் போது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது - பாஜக
x

மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை அமைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு துர்கா பூஜை பந்தலில், மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் சூலாயுதத்தால் வதம் செய்யப்படுவது போல அமைக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

அக்டோபர் 2 ஆம் தேதி தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அன்று சர்ச்சை வெடித்தது.இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், போலீசின் அறிவுறுத்தலின் படி காந்தி பொம்மையை மாற்றி மகிசாசுரன் பொம்மை ஒன்றை அங்கே வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இன்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "காந்திஜியை அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் திரிணாமுல் ஆளும் மேற்கு வங்கத்தில் கடந்த காலங்களில் பல பூஜைகள் பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளன.

இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்து, அரசு நிர்வாகம் பாராட்டத்தக்க வகையில் உடனடியாக பதிலளித்தாலும், ஹூக்ளி சம்பவத்திற்குப் பிறகு அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் கொடியுடன் கூடிய துர்க்கை அம்மன் சிலை இருத்தது.

2019இல் கொல்கத்தாவில் உள்ள ஒரு துர்கா பூஜை பந்தலில் இஸ்லாமிய பிரார்த்தனை ஒலிபரப்பட்டது. ஆனால் அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதல் மந்திரி மம்தா, மகாளய காலம் தொடங்குவதற்கு முன்பே பூஜைகளை துவக்கி வைக்கிறார் மற்றும் மேடையில் தவறான ஸ்லோகங்களை உச்சரிக்கிறார்.

இது நல்லிணக்கத் திருவிழா என்பதில் சந்தேகமில்லை. ஆனால், திரிணாமுல் கங்கிரஸ் துர்கா பூஜையின் மத உணர்வை ஒரு கேலிக்கூத்தாக குறைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

திரிணாமுல் காங். மாநில செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், "துர்கா பூஜை என்பது ஒரு சமூக விழா.

மேற்கு வங்காளத்தில் மனிதநேயம் மற்றும் நல்லுறவின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் பாஜக எப்போதும் குழப்பங்களை உருவாக்க விரும்புகிறது" என்று குற்றம் சாட்டினார்.


Next Story