ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு - அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

ஹோலி விடுமுறைக்குப் பிறகு ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை விசாரிக்க அமர்வு உருவாக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி நிர்வாகம், கடந்த ஆண்டு (2022) முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

மேலும் இதை கண்டித்து இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதில் மண்டியா, சிவமொக்கா, பெலகாவி பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சகஜநிலை திரும்பிய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து கர்நாடக அரசு, பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடை, கயிறு உள்ளிட்டவற்றை அணிந்து வர தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அந்த மாணவிகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் மீது விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தை சோ்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், அவர்கள், "கர்நாடகத்தில் வருகிற மார்ச் மாதம் பள்ளி-கல்லூரிகளில் ஆண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதையொட்டி தங்களுக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரி உள்ளனர்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது மாணவிகள் சார்பில் ஆஜரான வக்கீல், சாதன் பராசத், "வருகிற மார்ச் 9-ந் தேதி கர்நாடகத்தில் பள்ளி தேர்வுகள் தொடங்குகின்றன. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும்.

பெரும்பாலான மாணவிகள் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள். தேர்வுகள் அரசு பள்ளிகளில் நடைபெறும். அங்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. அதனால் இந்த மனு மீது அவசரமாக விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த முறையீட்டை நிராகரித்த நீதிபதி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை விடப்ப்படுவதால், அதன் பிறகு இந்த மனுவை விசாரிக்க அமர்வு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story