மணிப்பூர் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்குமாறு இருகரம் கூப்பி வேண்டுகிறேன் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி அழைப்பு


மணிப்பூர் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்குமாறு இருகரம் கூப்பி வேண்டுகிறேன் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி அழைப்பு
x

மணிப்பூர் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளை இருகரம் கூப்பி வேண்டுவதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு வரும் கலவரம் மற்றும் அதில் 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் போர்க்கோலம் பூண்டு வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 2 நாள் அலுவல்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் கூட்டாக போராடுவதற்கும் திட்டமிட்டு உள்ளன.

ஆனால் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து வருகிறது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி அனுராக் தாகூர், எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை அரசியலாக்காதீர்கள். அந்த கொடூர சம்பவம் வலி மிகுந்தது. எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும், அப்படிப்பட்ட சம்பவங்களை தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.

மணிப்பூர், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஆர்வமாக உள்ளது. இது குறித்து நல்ல விவாதம் நடைபெற வேண்டும் எனவும், அதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கவும் விரும்புகிறோம். விவாதத்தில் பங்கேற்காமல் யாரும் இருக்கக்கூடாது. விவாதத்தில் பங்கேற்க வாருங்கள் என்று இருகரம் கூப்பி எதிர்க்கட்சிகளை வேண்டுகிறேன்.

இந்த பிரச்சினையை அரசியலாக்காமல், நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டும். மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கவே எதிர்க்கட்சிகள் இவற்றை எல்லாம் செய்கின்றன. ஆனால் அதில் பங்கேற்க எதையும் செய்யவில்லை.

இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.


Next Story