இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம்; மத்திய அரசு உத்தரவு


இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம்; மத்திய அரசு உத்தரவு
x

இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.



புதுடெல்லி,


இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுபற்றி மத்திய சட்ட மற்றும் நீதி மந்திரி கிரண் ரிஜிஜூ வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்வதில் அகமகிழ்கிறோம்.

இதேபோன்று, சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக நீதிபதி கே.டி. சங்கரன், பேராசிரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி. வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா மற்றும் எம். கருணாநிதி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி முதல் 2022-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி வரை ரிதுராஜ் அவஸ்தி பணியாற்றி உள்ளார். 2009-2021 ஆண்டுகள் வரை அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாகவும் அவர் பணியில் இருந்துள்ளார்.

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் கடைசியாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஓய்வு பெற்ற பின்னர் அந்த பதவிக்கான நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த சட்ட ஆணையம், சட்ட நிபுணர்களை கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில், செயல்படுகிறது. சட்டரீதியில் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு சட்ட சீர்திருத்தத்திற்கான ஆலோசனை வழங்கும் பணியை இந்திய சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


Next Story