சனாதனம் தொடர்பான அவதூறுகளுக்கு தக்க பதிலடி -பிரதமர் மோடி உத்தரவு
சனாதனம் தொடர்பான அவதூறு கருத்துகளுக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
சென்னையில் கடந்த 2-ந் தேதி 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது.
சர்ச்சை
அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.
அவரது பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் போலீஸ் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உத்தரவு
அயோத்தியை சேர்ந்த ஒரு சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்தார். இருப்பினும், சனாதன கோட்பாடுகளுக்கு எதிராக தனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சனாதன தர்மத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சனாதன தர்மத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அவர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதற்கு முன்பு, மத்திய மந்திரிகளுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் பிரதமர் மோடி உரையாடினார்.
சனாதன தர்மம், இந்தியா-பாரதம் சர்ச்சை, ஜி-20 மாநாடு ஆகிய விவகாரங்கள், இந்த ஆலோசனையில் இடம்பெற்றன.
பதிலடி கொடுங்கள்
சனாதன தர்ம சர்ச்சை தொடர்பாக மத்திய மந்திரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-
சனாதன தர்மத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு சனாதன தர்மம் பற்றியும், தற்கால உண்மைகளையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
சரித்திரத்துக்குள் செல்லாதீர்கள். அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக்கூறி, பதிலடி கொடுங்கள். அத்துடன், சனாதன தர்மத்தின் தற்கால நிலவரம் பற்றியும் பேசுங்கள். அளவுடன் எதிர்வினை ஆற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-பாரதம்
அதே சமயத்தில், நாட்டின் பெயரை 'பாரதம்' என்று மாற்றுவது தொடர்பான விவகாரம், சனாதன தர்ம சர்ச்சையை மழுங்கடித்து விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
'இந்தியா-பாரதம்' சர்ச்சை குறித்து மத்திய மந்திரிகள் பேசுவதற்கு அவர் தடை விதித்தார். அதுபற்றி பேசுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட பா.ஜனதா நபர்கள் மட்டும் கருத்து தெரிவித்தால் போதும் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜி-20 மாநாடு
மேலும், இந்த ஆலோசனையின்போது, ஜி-20 மாநாடு தொடர்பாக என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். இந்த மாநாடு, 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், மரபு வழிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாட்ரா விளக்கம் அளித்தார். இந்தியாவுக்கும், அதன் உலகளாவிய நற்பெயருக்கும் ஜி-20 மாநாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய மந்திரிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
அப்போது, மத்திய மந்திரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-
ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடக்கும் பாரத் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தங்களது அதிகாரபூர்வ கார்களை மத்திய மந்திரிகள் பயன்படுத்தக்கூடாது.
வி.ஐ.பி. கலாசாரத்தை கைவிட்டு, நாடாளுமன்றத்தில் கூட வேண்டும். அங்கிருந்து மாநாட்டு இடங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்ய வேண்டும்.
செல்போன் செயலி
சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்பட 40 உலக தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும்.
செல்போனில், 'ஜி-20 இந்தியா' என்ற செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், ஜி-20 நாடுகளின் மொழிகள் மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி உள்ளது.
வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் உரையாடும்போது, அது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.