ரவுடிகளை பயன்படுத்தி சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமா?


ரவுடிகளை பயன்படுத்தி சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமா?
x
தினத்தந்தி 30 Nov 2022 1:51 AM IST (Updated: 30 Nov 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ரவுடிகளை பயன்படுத்தி சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள்

கர்நாடக பா.ஜனதா கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அக்கட்சி கூறியது. ஆனால் அதை உயர்த்தவே இல்லை.

இந்த அரசு செயல்படாமல் உள்ளதற்கு பா.ஜனதா தலைவர்களே சான்றிதழ் வழங்குகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடகத்தின் வளர்ச்சி சக்கரம் நின்றுவிட்டது மட்டுமின்றி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜனதாவில் உட்கட்சி மோதல் விரைவில் வெடிக்கும். மாநிலத்தை விட்டே விரட்டியடிக்கப்பட்ட ரவுடிகளை பா.ஜனதா முன்மாதிரி நபர்களாக மாற்றி கொண்டுள்ளது.

ரவுடிகள் அணி

போலீசார் முன்பு தலை வணங்கி நின்ற ரவுடிக்கு அதே போலீசார் வணக்கம் செலுத்தும் நிலையை இந்த பா.ஜனதா அரசு ஏற்படுத்துகிறது. 40 சதவீத கமிஷன் போதாது என்று, ரவுடிகளை கட்சியில் சேர்த்து கொண்டு அவர்கள் மூலம் மாமூல் வசூல் செய்ய பா.ஜனதா அரசு ஏற்பாடு செய்தது போல் தெரிகிறது. பா.ஜனதாவில் ரவுடிகள் அணி ஒன்றை தொடங்க திட்டம் இருப்பது போல் தெரிகிறது.

தோல்வி பயத்தில் உள்ள பா.ஜனதா ரவுடிகளை பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதா?. இது தான் பா.ஜனதாவின் கலாசாரமா?. டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களை

சந்திக்க பசவராஜ் பொம்மை முயற்சி செய்வதை பார்க்கும்போது, பாவமாக உள்ளது. அவர் இதுவரை 12 முறை டெல்லி பயணம் மேற்கொண்டும் மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு ஒரு பைசா உதவி கூட கிடைக்கவில்லை.

மந்திரிசபை விரிவாக்கம்

பசவராஜ் பொம்மையின் கஷ்டம் தான் விரிவாக்கம் ஆகிறதே தவிர அவரது மந்திரிசபை விரிவாக்கம் ஆகவில்லை. பசவராஜ் பொம்மையை சந்திக்க ஜே.பி.நட்டா நேரம் ஒதுக்காமல் இழுத்தடிப்பது ஏன்?. அவர் அந்த அளவுக்கு திறனற்ற முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை உள்ளாரா?. இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Next Story