நாட்டுக்காக விசுவாசமுடன் போராடி, பயங்கரவாதிகளால் சுடப்பட்ட ராணுவ நாய் ஜூம் உயிரிழப்பு

நாட்டுக்காக விசுவாசமுடன் போராடி, பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்ட ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்து உள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்பவா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.
இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷம் வாய்ந்தது. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர். எனினும், பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலைய செய்தது. அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதற்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது. எனினும் இன்று மதியம் 12 மணியளவில் அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. காலை 11.45 மணிவரை நன்றாக இருந்தபடி காணப்பட்ட ஜூம், திடீரென மூச்சுவிட சிரமப்பட்டது. பின்னர் உயிரிழந்து விட்டது என ராணுவம் தெரிவித்து உள்ளது.