ஜம்மு காஷ்மீரில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மரியாதை
ஜம்மு காஷ்மீரில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மரியாதை செய்தனர்.
டோடா,
இந்திய ராணுவம் நேற்று ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றியது. பட்டொளி வீசி பறந்த தேசிய கொடிக்கு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
ராணுவத்தின் டெல்டா படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜய் குமார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் 9-வது பிரிவு தளபதியுடன், தோடா விளையாட்டு அரங்கில் இந்த உயரமான தேசிய கொடியை ஏற்றினார்.
"நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்த எண்ணற்ற ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உரிய அஞ்சலியாக இது அமைந்துள்ளது. பள்ளத்தாக்குப் பகுதியில் பறக்கும் உயர்ந்த தேசியக்கொடி தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போதும் தேசபக்தியை நெஞ்சில் விதைக்கும்" என்று அவர் கூறினார்.
செனாப் பள்ளத்தாக்கு மண்டலத்தில் ஏற்றப்படும் 2-வது உயரமான தேசியக்கொடி இதுவாகும். இதற்கு முன்னர் அருகிலுள்ள பகுதியான கிஸ்ட்வார் நகரத்தில் 100 அடி உயர தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமிருந்தது ஒடுக்கப்பட்டு, அங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தேசத்திற்காக உயிர்நீத்த ராணுவவீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர். ராணுவத்தில் சிறந்த பங்களிப்பு செய்த வீரர்களும் கவுரவிக்கப்பட்டனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் மற்றும் மாணவ மாணவிகள், உள்ளூர் மக்கள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.