போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்பனை; பெண்கள் உள்பட 7 பேர் கைது
பெங்களூருவில், பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில், பிரபல பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலி மதிப்பெண் சான்றிதழ்கள்
பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்பட நாட்டில் உள்ள முக்கியமான 29 பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்படுவது பற்றி போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த வீட்டில் வைத்து கர்நாடகம், உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 29 பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள் உள்பட 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ரூ.15 லட்சத்திற்கு விற்பனை
அப்போது 7 பேரும் சேர்ந்து பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்ததும், அதனை ரூ.1 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அந்த வீட்டில் இருந்து 1,500 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், பல்கலைக்கழகங்களின் 80 போலி ரப்பர் ஸ்டாம்புகள், 7 ஹார்டு டிஸ்க்குகள், கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ்கள், ரப்பர் ஸ்டாம்புகள் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை கமிஷனர் பிரதாப் ரெட்டி, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சரணப்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.