பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு உள்துறை மந்திரி, போலீசார் உடந்தை; தலித் அமைப்பினர் குற்றச்சாட்டு
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு உள்துறை மந்திரி, போலீசார் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டி தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவின் பாலியல் வழக்கில் உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா, போலீசார் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டி சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த தலித் அமைப்பினர் ஆசாத் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தாலுகா அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ரோடு வழியாக ஆசாத் பூங்கா வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவுக்கு உள்துறை மந்திரியும் மற்றும் சித்ரதுர்காவை சேர்ந்த போலீஸ்காரர்களும் உடந்தையாக இருக்கின்றனர். பாலியல் வழக்கு குற்றவாளி போல் அவரை பார்க்காமல் அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.
எனவே, உள்துறை மந்திரி அரக ஞானேந்திராவை பதவி நீக்கம் செய்யவேண்டும். ேமலும் சித்ரதுர்கா போலீசாரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர். பின்னர் இதுதொடர்பாக அவர்கள், கலெக்டர் ரமேசை சந்தித்து தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்துவிட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.