பெரும்பான்மை இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்? கெஜ்ரிவால் பரபரப்பு விளக்கம்


பெரும்பான்மை இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்? கெஜ்ரிவால் பரபரப்பு விளக்கம்
x

பொய் வழக்குகள் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்படுகின்றன என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் கெஜ்ரிவால் ஆட்சி நடத்தி வந்தாலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார். தனது கட்சி எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டதாகவும் பரபரப்பை கிளப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் இன்று திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கெஜ்ரிவால் கொண்டு வந்தார் . நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்த பிறகு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,"பொய் வழக்குகள் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்படுகின்றன.

அதேபோல அரசுகள் கவிழ்வதையும் பார்க்கிறோம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள். டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால், டெல்லி அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த, நான் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்வைக்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story