அசாம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திடீர் ராஜினாமா
அசாம் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கம்ருல் இஸ்லாம் சவுத்ரி தனது ராஜினாமாவை தலைமைக்கு அனுப்பிவைத்து உள்ளார்.
கவுகாத்தி
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அசாம் காங்கிரஸ் கமிட்டியின் (ஏபிசிசி) பொதுச் செயலாளர் கம்ருல் இஸ்லாம் சவுத்ரி கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதி உள்ள ராஜினாமா கடிதத்தில், கட்சியின் அசாம் பிரிவு 'நிலையற்றது'. அசாமில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய ஸ்திரமின்மைக்கு கடந்த சில மாதங்களாக அசாம் காங்கிரஸ் கமிட்டியின் (ஏபிசிசி) 'திசையற்ற மற்றும் குழப்பமான' தலைமையே காரணம். இதனால் தான் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் சவுத்ரி கூறி உள்ளார்.
சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் அசாம் காங்கிரஸ் தலைவர் பூபென் போரா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கதர் (கோழைகள்) என்றும் போரா குறிப்பிட்டதாக அவர் கூறி உள்ளார்.
என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான அடிமட்ட ஊழியர்கள் கட்சிக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி பல வருடங்களாகக் கட்சிக்காக உழைத்து மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி உள்ளார்.
கம்ருல் இஸ்லாம் சவுத்ரி இதற்கு முன்னர் இந்திய தேசிய மாணவர் காங்கிரசின் மாணவர் பிரிவின் தேசிய செயலாளராகவும், அசாம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.