அசாம் மாநிலத்தை புரட்டி போட்ட வெள்ளம்! பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு; 5.80 லட்சம் பேர் பாதிப்பு!
அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை கணிசமாக மேம்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
பிரம்மபுத்ரா நதியின் கிளை நதிகளான கோப்பிலி, காம்பூர் ஆகியவற்றில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை கணிசமாக மேம்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை வரை 6.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, அசாமில் வெள்ள நிலைமை சற்று சீரடைந்தது. எனினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தான் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்ததால், மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.17 மாவட்டங்களில் 5.80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், நாகோன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு 3.46 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 18000 பேர் 54 முகாம்களில் தங்கி உள்ளனர். மேலும் பலர் சாலைகள், ரெயில்வே தண்டவாளங்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் மேடான பகுதிகள் ஆகியவற்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
முகாமில் உள்ள ஒரு பெண்மணி கூறுகையில், வெள்ளத்தில் எல்லா பொருட்களும் அடித்து செல்லப்பட்டு விட்டன. மாற்று துணி கூட இல்லாததால் என்னுடைய மகளின் பள்ளி சீருடைகளை உடுத்தி கொண்டு சமாளித்து வருவதாக கூறினார்.
மாநிலத்தில், 1,709 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 82 ஆயிரம் ஹெக்டரில் பயிர்கள் நாசமாகியுள்ளன. எட்டு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில், 19 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 91 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்து உள்ளன.
அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த மே 24ஆம் தேதி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, "பெரும்பாலான சாலை மற்றும் மின்சார விநியோக அமைப்புகள், நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மற்றும் தொங்கு பாலங்கள் உள்ளிட்டவை இந்த வெள்ளத்தால் மோசமாக சேதமடைந்துள்ளன. வெள்ள பாதிப்பு குறித்த விரிவான அறிக்கைகளுக்குப் பிறகு, அரசு புதிய திட்டங்களுடன் சேதங்களை மீண்டும் கட்டமைக்கும்" என்றார்.