குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை; சிறுமிகளின் நிலை என்ன? ஓவைசி கேள்வி


குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை; சிறுமிகளின் நிலை என்ன? ஓவைசி கேள்வி
x

குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை எடுத்துள்ள சூழலில், சிறுமிகளின் நிலை என்ன? என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத்,


நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் திருமணம் பற்றி தேசிய குடும்ப சுகாதார சர்வே எடுக்கப்பட்டது. அதன் அறிக்கை அடிப்படையில் அசாமில் குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம் என்பதுடன் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

அசாம் மாநிலத்தில் சட்ட விரோத குழந்தை திருமணங்கள் அதிகரித்து இருப்பது தெரிய வந்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த ஜனவரி 23-ந்தேதி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.

இந்நிலையில், அசாமில் முதல்-மந்திரியின் உத்தரவை தொடர்ந்து, குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் நேற்று காலை வரையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர் என சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் செய்தி தொடர்பாளர் பிரசந்த குமார் கூறினார்.

குழந்தை திருமணங்கள் தொடர்பாக இதுவரை 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், கைது எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அவர் கூறினார். அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறும் 2026-ம் ஆண்டு வரை தேடுதல் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் திருமண சடங்குகளை நடத்திய சாமியார்கள் மற்றும் காஜிக்கள் ஆவர் என டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார். அவர்களில் பலர் தூப்ரி, பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் விஸ்வநாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஐதராபாத் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசும்போது, அசாமில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரம் பேர் மீது அரசு வழக்கு பதிவு செய்து உள்ளது.

அதுபற்றி அரசு பேசி வருகிறது. ஆனால், அந்த சிறுமிகளை இனி யார் பாதுகாப்பார்கள்? அவர்கள் மீது மலையளவு சுமையை நீங்கள் சுமத்தி இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். சிறுமிகளின் கணவன்கள் சிறைக்கு போய் விட்டால், சிறுமிகளை முதல்-மந்திரி (ஹிமந்தா பிஸ்வா சர்மா) பார்த்து கொள்வாரா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

அசாமில் 6 ஆண்டுகளாக நீங்கள் அரசாட்சி செய்து வருகிறீர்கள். இது உங்களுடைய அரசின் தோல்வியே ஆகும். அசாமில் ஏன் அதிக அளவிலான பள்ளிகளை நீங்கள் கட்டவில்லை? என அவர் கேட்டுள்ளார்.

1 More update

Next Story