அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை... குழந்தை திருமணங்கள் நிறுத்தப்படவேண்டும் - அசாம் முதல்-மந்திரி திட்டவட்டம்


அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை... குழந்தை திருமணங்கள் நிறுத்தப்படவேண்டும் - அசாம் முதல்-மந்திரி திட்டவட்டம்
x

ஒட்டுமொத்த இந்தியாவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவிகிதமாக உள்ள நிலையில் அசாமில் எச்சரிக்கை அளிக்கும் வகையில் 11.7 சதவிகிதமாக உள்ளது.

கவுகாத்தி,

இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும். 18 வயதிற்கு குறைவான சிறுமிகளை திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால், சட்டப்படியாக திருமண வயதான 18 வயது அடைவதற்கு முன் நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதனிடையே, 2019-20-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது தெரியவந்தது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் குழந்தை திருமணம் நடைபெறும் சராசரி 6.8 சதவிகிதமாக இருந்து வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் உச்சபட்சமாக எச்சரிக்கும் வகையில் 11.7 சதவிகிதம் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இது அசாமில் அதிக திருமணங்கள், அதிக குழந்தை இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த ஆய்வறிக்கையை மையமாக கொண்டு குழந்தை திருமணத்தை தடுக்க அசாம் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ள முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அசாம் அரசு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்தது.

அதன்படி, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த இளைஞர்கள் மற்றும் ஆண்கள் கைது செய்யப்படுவர். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அசாம் முதல்-மந்திரி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அசாமில் குழந்தை திருமணத்தை ஒழிக்க அசாம் அரசு அதிரடியாக களமிறங்கியது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், 18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த 2 ஆயிரத்து 258 பேரை அதிரடியாக கைது செய்துள்ளது. குழந்தை திருமணம் செய்து வைத்த மதபோதகர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.

இதனிடையே, கைது செய்யப்பட்ட குழந்தை திருமணம் செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென பெண்கள் சிலர் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதி இதுவாகும்.

2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து காப்பாற்றவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

அனுதாபம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை... அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்படவேண்டும்' என்றார்.


Next Story