கோவில் நில தகராறில் கோஷ்டி மோதல்: ஆயுதங்களால் தாக்கி வாலிபர் படுகொலை


கோவில் நில தகராறில் கோஷ்டி மோதல்:  ஆயுதங்களால் தாக்கி வாலிபர் படுகொலை
x

பெலகாவியில் கோவில் நிலத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு: பெலகாவியில் கோவில் நிலத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் கொலை

பெலகாவி மாவட்டம் கவுண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ் பட்டீல் (வயது 37). இந்த கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக ஏற்கனவே இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த கிராமத்தில் கோவில் நிலம் தொடர்பாக இருதரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருதரப்பினர் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்கினார்கள். மேலும் சதீஸ் பட்டீலை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். இதனால் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். சதீஸ் பட்டீல் கொலை செய்யப்பட்டு இருப்பது பற்றிய தகவல் கவுண்டவாடி கிராமம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக சதீஸ் பட்டீல் தரப்பை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

வாகனங்களுக்கு தீவைப்பு

பின்னர் கிராமத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இதன் காரணமாக வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பெலகாவி புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் வாகனங்களில் பிடித்து எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து வாகனங்களில் பிடித்து எரிந்த தீ அணைக்கப்பட்டது.

ஆனாலும் 4 கார்கள், ஒரு டிராக்டர், ஒரு வேன், மினி லாரி தீயில் எரிந்து நாசமானது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் ரவீந்திரா தலைமையிலான போலீசார் கிராமத்திற்கு விரைந்து சென்றார்கள். பின்னர் சதீஸ் பட்டீலின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவில் நில விவகாரத்திலும், அந்த நிலத்தில் வாகனத்தை நிறுத்தியதாலும் இருதரப்பினர் இடையே மோதல் உருவானதுடன், சதீஸ் பட்டீல் கொலை செய்யப்பட்டு இருப்பதும், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதும் தெரிந்தது.

போலீஸ் குவிப்பு

இந்த மோதலை தொடர்ந்து கவுண்டவாடி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மோதலை தொடர்ந்து இருதரப்பினரை சேர்ந்தவர்களும் நள்ளிரவே கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார்கள். முன்எச்சரிக்கையாக நேற்றும் கிராமத்தில் போலீசாா் குவிக்கப்பட்டு இருந்ததால், அங்கு அமைதி திரும்பியது. கோவில் நில தொடர்பாக ஏற்கனவே 3 முறை கவுண்டவாடி கிராமத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட சதீஸ் பட்டீல் தான் ஒரு தரப்பில் தலைவர் போல இருந்ததாகவும், அதனால் அவரை மற்றொரு தரப்பினர் கொலை செய்திருப்பதாகவும் பெலகாவி மாவட்ட போலீஸ் கமிஷனர் போரலிங்கே கவுடா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோஷ்டி மோதல் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story