அரியானா குருகிராம் பகுதியில் மீண்டும் வன்முறை: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு; முதல்-மந்திரி அவசர ஆலோசனை


அரியானா குருகிராம் பகுதியில் மீண்டும் வன்முறை: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு; முதல்-மந்திரி அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 1 Aug 2023 5:47 PM IST (Updated: 1 Aug 2023 6:12 PM IST)
t-max-icont-min-icon

மறுபுறம் வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

குருகிராம்,

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நேற்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது.

ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவை சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இரு தரப்பும் கற்களை வீசி தாக்கினர். இதில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையில் இருந்து தப்புவதற்காக ஏராளமானோர் அருகில் உள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மறுபுறம் வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். அத்துடன் துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுக்கொண்டனர். இந்த மோதலில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில், நேற்று கலவரத்தில் வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த நிலையில், இன்று காலை குருகிராமில் உள்ள அஞ்சுமன் ஜமா மசூதிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதில் மசூதியின் துணை இமாம் மவுலானா சாத் (19) உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நூ கலவரத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். மசூதிக்கு தீ வைத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நூ கலவரம் தொடர்பாக அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனில் விஜ், "அரியானாவின் அமைதியை கெடுக்க யாரோ சிலர் விரும்புகின்றனர். நூ மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இந்த வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வதந்தி பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தில் நாளை வரை இணையதள முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story