சிவமொக்காவில், இந்து மகாசபை சார்பில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான பாதை அறிவிப்பு
சிவமொக்காவில், இந்து மகாசபை சார்பில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கான பாதையை மாவட்ட கலெக்டர் செல்வமணி அறிவித்துள்ளார்.
சிவமொக்கா;
விநாயகர் சிலை ஊர்வலம்
சிவமொக்கா நகர் கோட்டை பகுதியில் பீமேஸ்வரா கோவில் உள்ளது. இந்து மகாசபை சார்பில் அங்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலை வைக்கப்பட்டு ஒன்பதாம் நாளில் விநாயகர் சிலை நீர்நிலையில் விசர்ஜனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி விநாயகர் சிலை 9-ம் நாளான நாளை(வெள்ளிக்கிழமை) விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.
ஆனால் சிவமொக்காவில் அடிக்கடி மத பிரச்சினைகளால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருவதால் விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாக நடத்த மாவட்ட கலெக்டர் செல்வமணி போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் இதுபற்றி இந்து மகாசபை நிர்வாகிகளையும் அழைத்து பேசினார்.
குவெம்பு சாலை
அதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தின் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் செல்வமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 9-ந் தேதி(நாளை) கோட்டை பகுதியில் இருந்து காலை 10 மணி அளவில் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்படும். எஸ்.பி.எம். சாலை, ராமண்ணா ஷெட்டி பூங்கா சதுக்கம், காந்தி பஜார், எஸ்.என்.சதுக்கம், பி.எச்.சாலை, அமீர் அகமது சதுக்கம், நேரு சாலை, கோபி சதுக்கம், குவெம்பு சாலை, சவலங்கா சாலை, சிவமூர்த்தி சதுக்கம், போலீஸ் கார்னர், கோட்டை போலீஸ் நிலைய சாலை வழியாக கோட்டை பின்புறம் உள்ள துங்கா ஆற்றுக்கு ஊர்வலம் செல்ல வேண்டும்.
ஆம்புலன்ஸ் வாகனம்
ஊர்வலம் செல்லும்போது அவ்வழியாக மற்ற வாகனங்களை போலீசார் அனுமதிக்க கூடாது. ஊர்வலத்தின் முன்பு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் முன்பும், பின்பும் போலீசார் செல்ல வேண்டும். முக்கிய பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்போது அவர்களைச் சுற்றி பாதுகாப்பு அரண் போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
பத்ராவதி, பெங்களூருவில் இருந்து சிவமொக்கா டவுனுக்கு வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் எம்.ஆர்.எஸ். சதுக்கத்தில் இருந்து பைபாஸ் வழியாக அரசு பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்களும் அதே பாதையை பயன்படுத்த வேண்டும்.
எம்.ஆர்.எஸ். சதுக்கம்
தாவணகெரே, ஒன்னாளி பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், ரெயில்வே மேம்பாலம், சங்கரா மடம், எம்.ஆர்.எஸ். சதுக்கம், பைபாஸ் சாலை வழியாக சிவமொக்கா டவுனில் உள்ள பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும்.
சித்ரதுர்கா, ஹொலேஹொன்னூர் பகுதிகளில் இருந்து வரும் பஸ்களும், பிற வாகனங்களும் எம்.ஆர்.எஸ். சதுக்கம் வழியாக சென்று வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.