ராஜஸ்தானில் கொடூரம்; கர்ப்பிணிகள் உள்பட 5 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்பு


ராஜஸ்தானில் கொடூரம்; கர்ப்பிணிகள் உள்பட 5 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்பு
x

ராஜஸ்தானில் 2 கர்ப்பிணிகள், கைக்குழந்தை உள்பட 5 பேரின் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் துது நகரில் கிணறு ஒன்றில் 5 உடல்கள் இன்று மிதந்துள்ளன. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றினர். அவர்களில் படுகொலை செய்யப்பட்ட பெண்கள் காலு தேவி, மம்தா மற்றும் கம்லேஷ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 4 வயது குழந்தை மற்றும் பிறந்து 27 நாட்களேயான குழந்தை ஆகிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவர்கள் காலு தேவியின் குழந்தைகள்.

இவர்களில் மம்தா தேவி மற்றும் கம்லேஷ் ஆகிய இருவரும் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர் என்ற கொடுமையும் தெரிய வந்துள்ளது.

அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்ட கிணறு, அவர்களுடைய வீடுகளில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளன. வரதட்சணை கேட்டு அவர்களது உறவினர்கள் கொலை செய்திருக்க கூடும் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமையே அவர்கள் 5 பேரும் காணவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபடவில்லை. காலு தேவியை அவர்களது உறவினர்கள் அடித்து, தாக்கியதில் அவர் 15 நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு உள்ளது. சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து சமீபத்திலேயே அவர் வீட்டுக்கு வந்துள்ளார் என உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். கர்ப்பிணியான 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story