பெங்களூருவில் பாரதிய விவசாயிகள் சங்க தலைவரை தாக்கி, கருப்பு மை பூச்சு
பெங்களூருவில் பாரதிய விவசாயிகள் சங்க தலைவரை தாக்கியதுடன், முகத்தில் கருப்பு மை பூசிய சம்பவம் நடந்துள்ளது. மேலும் நாற்காலிகளை வீசி மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
கோடிஹள்ளி மீது குற்றச்சாட்டு
கர்நாடக மாநில விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர். இவர், சில அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு பிரஸ் கிளப்பில் கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோடிஹள்ளி சந்திரசேகர், குருபூர் சாந்தகுமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் உருவாகி இருந்தது.
இந்த நிலையில், கோடிஹள்ளி சந்திரசேகா் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசுவதற்காக பாரதிய விவசாயிகள் சங்க தலைவரான ராகேஸ் டிகாயத் நேற்று பெங்களூருவுக்கு வந்திருந்தார். இவர், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முக்கியமான நபராக இருந்தவர் ஆவார். பெங்களூரு காந்திபவனில் நேற்று மதியம் ராகேஸ் டிகாயத் மற்றும் விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி கொண்டு இருந்தனர்.
தாக்குதல், கருப்பு மை பூச்சு
அந்த சந்தர்ப்பத்தில் காந்திபவனுக்கு வந்த ஒரு கும்பல், மேடையில் அமர்ந்திருந்த ராஜேஸ் டிகாயத் மீது, அங்கிருந்த மைக்கை எடுத்து திடீரென்று தாக்கினார். அடுத்து வந்த ஒரு நபர் தான் வைத்திருந்த கருப்பு மையை ராகேஸ் டிகாயத் முகத்தில் வீசினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காந்திபவனில் அமர்ந்திருந்த விவசாயிகளுக்கும், மர்மநபர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது அங்கு கிடந்த நாற்காலிகளை எடுத்து தூக்கி வீசினார்கள். ஒருவருக்கொருவர் நாற்காலியால் தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தினாா்கள். மேலும் தாக்குதலுக்கு உள்ளான ராகேஸ் டிகாயத்தை பாதுகாப்பாக அழைத்து சென்றார்கள். அதே நேரத்தில் ராகேஸ் டிகாயத் மீது நடந்த தாக்குதலை கண்டித்து காந்திபவன் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டாா்கள். அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும்படியும் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் விவசாயிகளை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது
போலீஸ் விசாரணையில், விவசாயிகள் சங்க தலைவரான ராகேஷ் டிகாயத் மீது பாரத் ரக்சனா அமைப்பை சேர்ந்த பரத் ஷெட்டி, திலீப், சிவக்குமார், இவரது ஆதரவாளர்கள் தான் தாக்குதல் நடத்தியதுடன், கருப்பு மை பூசியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத் ஷெட்டி, திலீப், சிவக்குமாரை கைது செய்துள்ளனர்.
இதுபற்றி ராகேஸ் டிகாயத் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் என் மீது தாக்குதல் நடத்தி கருப்பு மை பூசினார்கள். எனக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் கர்நாடக பா.ஜனதா அரசு தோல்வி அடைந்து விட்டது. என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.