கோர்ட்டு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 10 பேர் கைது


கோர்ட்டு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 10 பேர் கைது
x

கோர்ட்டு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஹனிடிராப் கும்பலை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்

பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் வசித்து வருபவர் ஜெயராம்(வயது 55). இவர் கோர்ட்டு ஊழியர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த அனுராதா என்ற பெண்ணுடன் ஜெயராமுக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயராமிடம் பேசிய அனுராதா, தனது வீட்டில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து விட்டதாகவும், அதை சரிசெய்ய ரூ.5 ஆயிரம் கடனாக தரும்படியும் கேட்டு உள்ளார்.

இதையடுத்து காமாட்சிபாளையா அருகே கொல்லரஹட்டியில் வசித்து வரும் அனுராதாவின் வீட்டிற்கு சென்ற ஜெயராம், அனுராதாவிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட முயன்றார். அப்போது அனுராதாவின் வீட்டிற்குள் வந்த சிலர் அனுராதாவும், ஜெயராமும் நெருக்கமாக இருப்பது போல வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர் அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.

10 பேர் கைது

இதற்கு ஜெயராம் மறுத்ததால் அவரை தாக்கிய கும்பல், கண்களில் மிளகாய் பொடியை தூவியதாகவும் தெரிகிறது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த ஜெயராம் சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயராமை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அனுராதா(25), அவரது தோழியான மல்லத்தஹள்ளியை சேர்ந்த வித்யா(35), நண்பர்களான தொட்டபிதரகல்லுவை சேர்ந்த சித்தேஷ்(25), காமாட்சிபாளையாவை சேர்ந்த குணா(23), கார்த்திக்குமார்(25), இந்திராநகரில் வசித்து வரும் சேது(19), கங்கொண்டனஹள்ளியில் வசித்து வரும் ரவிக்குமார்(25), ஸ்ரீராம்புரத்தை சேர்ந்த பிரசாந்த்(25).

ஆந்திரஹள்ளி மெயின் ரோட்டில் வசித்து வரும் உமாசங்கர், மீனாட்சிநகரை சேர்ந்த சூர்யராஜ் ஆகிய 10 பேரை காமாட்சிபாளையா போலீசார் கைது செய்தனர். கைதான 10 பேரிடம் இருந்து செல்போன்கள், ரூ.ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 10 பேரும் ஹனிடிராப் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்து உள்ளது.


Next Story