தம்பதியை தாக்கி கொள்ளைமுயற்சி;2 தொழிலாளிகள் கைது
சுள்ளியா தாலுகாவில் தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளிகள் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
மங்களூரு-
பண்ணை வீடு உரிமையாளர்
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பாம்பேதடி கிராமத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் விசுவநாத்(வயது 65). இவர் அந்த வீட்டில் தனது மனைவி காயத்திரி(61) உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு உதவியாக வீட்டில் வேலைக்காரர்களும் உள்ளனர். அவர்களும் அங்கேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக இவர்களது தோட்டத்தில் கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களும் அங்கேயே கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்கள்.
கொள்ளை முயற்சி
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி தொழிலாளர்கள் 2 பேர், வீட்டின் உரிமையாளர் விசுவநாத், அவரது மனைவி காயத்திரி ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விசுவநாத்தையும், அவரது மனைவியையும் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கூலி தொழிலாளர்களான வரதராஜ்(30) மற்றும் சைஜன் பிபி(38) ஆகியோர் என்பது தெரியவந்தது.
கைது
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.