தனியார் நிறுவன ஊழியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது; ஓரினச்சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டினார்


தனியார் நிறுவன ஊழியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது;  ஓரினச்சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டினார்
x

பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரினச்சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரினச்சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

தனியார் நிறுவன ஊழியர் கொலை

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா குரிதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 32). இவர், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பி.டி.எம். லே-அவுட் அருகே கேஷியர் லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரதீப் வசித்து வந்தார். கடந்த 2-ந் தேதி பிரதீப் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. தகவல் அறிந்ததும் மடிவாளா போலீசார், வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது பிரதீப், கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த மாதம் (மே) 30-ந் தேதி பிரதீப் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பிரதீப்பை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க மடிவாளா போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

ஓரினச்சேர்க்கை

இந்த நிலையில், பிரதீப் கொலையில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை மடிவாளா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் விஜயநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரக்சித் கவுடா (28) என்று தெரிந்தது. பிரதீப் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர் ரக்சித் கவுடாவுக்கும், பிரதீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

அதன்படி, கடந்த மாதம் 30-ந் தேதி பிரதீப் வீட்டுக்கு ரக்சித் கவுடா சென்றுள்ளார். அங்கு வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரக்சித் கவுடாவை பிரதீப் குத்தியுள்ளார்.

குத்திக் கொலை

இதில், ரக்சித் கவுடாவின் கையில் கத்திக்குத்து காயம் உண்டானது. உடனே பிரதீப் கையில் இருந்த கத்தியை பிடுங்கிய ரக்சித் கவுடா, அவரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் பிரதீப் செல்போனை கொள்ளையடித்து கொண்ட ரக்சித் கவுடா வீட்டுக்கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்று இருந்தார்.

போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கடந்த மாதம் 30-ந் தேதி ரக்சித் கவுடா வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர் போலீசாரிடம் சிக்கி இருந்தார். கைதான ரக்சித் கவுடா மீது மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story