பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்து 4 வயது குழந்தையை கடத்திச்சென்ற ஆட்டோ டிரைவர்
பெண் பயணியின் 4 வயது குழந்தையை ஆட்டோ டிரைவர் கடத்திச்சென்றார்.
டெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் நேற்று அதிகாலை 2 மணியளவில் பஸ்சில் டெல்லி வந்தார். அவர் டெல்லி ஆனந்த் விஹர் பஸ் நிலையத்தில் இருந்து டெல்லி சாட் பகுதிக்கு செல்ல வாடகை ஆட்டோவில் பயணித்துள்ளார்.
சந்தேஷ்வர் என்பவர் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட போது அப்பெண் உறங்கிய நிலையில் ஆட்டோ டிரைவர் டெல்லி சாட் பகுதிக்கு செல்லாமல் சர்தார் பஜார் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு மறைவான பகுதியில் ஆட்டோவை நிறுத்திய சந்தேஷ்வர் ஆட்டோவில் உறங்கிக்கொண்டிருந்த பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து விழித்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் சந்தேஷ்வர் பெண் பயணியின் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு பெண் பயணியின் 4 வயது குழந்தையையும் கடத்திச்சென்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் ஆட்டோ டிரைவர் சந்தேஷ்வரை தேடி வந்தனர்.
இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபின் ஆட்டோ எண் உள்ளிட்டவற்றை கொண்டு துல்புரா பகுதியில் பதுங்கி இருந்த சந்தேஷ்வரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து பெண் பயணியின் பணம், செல்போன் கைப்பற்றப்பட நிலையில் பெண் பயணியின் 4 வயது குழந்தையை எங்கே என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்தியா கேட் பகுதியில் குழந்தையை விட்டுவிட்டதாக சந்தேஷ்வர் கூறினார். உடனடியாக அப்பகுதிக்கு போலீசார் விரைந்த நிலையில் கடமைபாதை பகுதி போலீசார் தனியாக நின்றுகொண்டிருந்த குழந்தையை மீட்டது தெரியவந்தது.
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அவரின் தாயாரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆட்டோ டிரைவர் சந்தேஷ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.