ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு


ஜம்மு-காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 23 Aug 2022 6:07 PM IST (Updated: 23 Aug 2022 6:21 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என கேரள எம்.எல்.ஏ. பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில தாவனூர் தொகுதி எம்.எல்.ஏ. கேடி ஜலீல். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தாவனூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். இவர் அம்மாநிலத்தில் கடந்த இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் மந்திரியாக இருந்துள்ளார்.

இதனிடையே, கேடி ஜலீல் கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். தனது காஷ்மீர் பயணம் குறித்து ஜலீல் கடந்த 12-ம் தேதி தனது பேஸ்புக் சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் ஜலில் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரின் பகுதி 'அசாத் காஷ்மீர்' (விடுதலை பெற்ற காஷ்மீர்) என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் அரசின் எந்த கட்டுப்பாட்டிலும் இல்லை.

இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் அனைத்து பகுதியிலும் இருப்பதால் காஷ்மீர் மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டனர். ராணுவ வாகனங்கள், ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது காஷ்மீர் மக்களின் தினசரி வாழ்க்கையாக மாறிவிட்டது. காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவித அலட்சியம் நிலவுகிறது' என பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட ஜலீல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து அவர் தனது பதிவை திருத்தி எழுதியுள்ளார். அசாத் காஷ்மீர் (விடுதலை பெற்ற காஷ்மீர்) என்பதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என எடிட் செய்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் என்றும், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விடுதலை பெற்ற காஷ்மீர் என்றும் பதிவிட்ட எம்.எல்.ஏ. கேடி ஜலீல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அருண் மோகன் திருவல்லா முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை விடுதலை பெற்ற காஷ்மீர் என பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட எம்.எல்.ஏ. கேடி ஜலீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த உத்தரவிட்டார். இதையடுத்து, கேடி ஜலீல் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க.. ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என சர்ச்சை பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ.


Next Story