மழையின் தீவிரம் குறைந்ததால் வெள்ளம் வடிகிறது; சகஜநிலைக்கு திரும்பும், பெங்களூரு


மழையின் தீவிரம் குறைந்ததால் வெள்ளம் புகுந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. இதனால் மெல்ல மெல்ல பெங்களூரு தனது சகஜநிலைக்கு திரும்புகிறது. அத்துடன் மீட்பு பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.

பெங்களூரு: மழையின் தீவிரம் குறைந்ததால் வெள்ளம் புகுந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. இதனால் மெல்ல மெல்ல பெங்களூரு தனது சகஜநிலைக்கு திரும்புகிறது. அத்துடன் மீட்பு பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக கோர தாண்டவமாடி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதுபோல் இந்த ஆண்டும் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பெருத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கடலோரத்தில் அமைந்துள்ள தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி மற்றும் சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் உள்ளிட்ட மலைநாடு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வட கர்நாடகத்திலும் கனமழை பெய்தது.

அதே போல் தலைநகர் பெங்களூருவில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி கனமழை கொட்டியது. இதனால் சர்ஜாப்புரா-மாரத்தஹள்ளி புறவழிச்சாலையில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள் ஆறு போல் மாறியதால் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் நிறுவனங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் ஆனது. அதனால் டுவிட்டரில் இணையவாசிகள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

அரசுக்கு இக்கட்டான நிலை

இந்த வெள்ளத்தால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அந்த நிறுவனங்கள் கடிதம் எழுதின. இதனால் அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளாத நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் இடைவிடாது பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பொம்மனஹள்ளி, மகாதேவபுரா பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக பெல்லந்தூர் ஏரி நிரம்பியது. அந்த ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் அருகில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. அந்த ஏரியை ஒட்டியுள்ள சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சர்ஜாப்புரா-மாரத்தஹள்ளி புறவழிச்சாலையில் உள்ள லே-அவுட்டுகள் வெள்ளத்தில் மிதந்தன. சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ரெயின்போ டிரைவ் லே-அவுட்டில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. தரைத்தளத்தில் உள்ள வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கின.

வெள்ளம் வடியவில்லை

அதே போல் விலை உயர்ந்த சொகுசு வீடுகள் அமைந்துள்ள சன்னி புரூக்ஸ் லே-அவுட்டிலும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. மாரத்தஹள்ளி, எமலூர், காடுகோடி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை.

வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை பெங்களூரு மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அந்த பகுதிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டார். சர்ஜாப்புரா ரோட்டில் விப்ரோ மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் உள்ள எப்சிலான் ரெசிடென்சியில் அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜியின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 3 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வெள்ளம் வடியவில்லை. அதுபோல் பெல்லந்தூர் ஏரியை ஒட்டியுள்ள முன்னேகொலலே குடிசை பகுதியை சூழ்ந்த வெள்ளமும் இன்னும் வடியவில்லை. அங்கு தூய்மை பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தான் அதிகளவில் வசித்து வருகிறார்கள். வெள்ளம் வடியாததால் அங்கு வசித்து வரும் 1,500-க்கும் மேற்பட்டோர் இயல்புவாழ்க்கை முடங்கிபோய் உள்ளது.

சொகுசு பங்களாக்கள்

அது மட்டுமின்றி பைஜூஸ், பிரிட்டானியா உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் தலைவர்களின் வீடும் அங்கு நீரில் மூழ்கியுள்ளது. அங்கு ஒரு வீட்டின் விலை அதிகபட்சமாக ரூ.30 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. விலை உயர்ந்த சொகுசு பங்களாக்களை காலி செய்துவிட்டு அவர்கள் உறவினர்கள் மற்றும் ஓட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரெயின்போ டிரைவ் லே-அவுட்டில் இன்னும் வெள்ளம் தேங்கியுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் பிற பகுதிகளில் வெள்ளம் மக்கள் நடமாடும் அளவுக்கு வடிந்துள்ளது. ஆனால் வெள்ளம் வடிந்தாலும், வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேறும்-சகதியுமாக காட்சியளிக்கிறது. அந்த அலங்கோலத்தில் இருந்து வீடுகளை பார்த்த அதன் உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

சகஜநிலை திரும்புகிறது

அவர்கள் தேங்கிய நீரை அகற்றிவிட்டு அவற்றை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதிகளில் இன்னும் மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளன. மேலும் குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். சேதங்களை சரிசெய்து மின் வினியோகத்தை சீராக்க முயற்சி செய்வதாக அதிகாரிகள் கூறினர்.சர்ஜாப்புரா-மாரத்தஹள்ளி புறவழிச்சாலையில் இன்னும் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அந்த சாலையில் சென்றாலும் மிகவும் மெதுவாக செல்கின்றன. அதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து இன்னும் முழுமையாக சீராகவில்லை. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன.

பல சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தான் நீடித்து வருகிறது. உறவினர்கள் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தங்கியுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பி அவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிலைமை சற்று சீராகி சகஜநிலை திரும்புவதால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் மின் சேமிப்பு உபகரணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி மோசமாக சேதம் அடைந்துள்ளன.

1,491 பேர் மீட்பு

அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் தரைத்தளத்தில் இன்னும் வெள்ளம் தேங்கி இருப்பதால், மின்சாரத்தை வினியோகம் செய்வது என்பது பாதுகாப்பானது இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கியுள்ள லே-அவுட்டுகளில் இருந்து மக்களை பத்திரமாக மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,491 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில் தீயணைப்பு படையினர், மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவை புரட்டிப்போட்ட இந்த கனமழையால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

சாரல் மழை

பெங்களூருவில் நேற்று காலையில் இருந்து வாகனம் மேகமூட்டமாக இருந்தது. சாரல் மழை பெய்தபடி இருந்தது. அதனால் பலமான மழை பெய்யுமோ என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் பகலில் பயப்படும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

ஒருவேளை கனமான மழை பெய்தால் மீண்டும் அந்த பகுதிகள் பாதிக்கப்படுவதுடன் மீட்பு பணிகளும் நின்றுபோகும் நிலை ஏற்படும்.

பெங்களூருவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூருவில் கனமழை பெய்து வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story