ஏக்நாஷ் ஷிண்டே அணிக்கே எனது ஆதரவு: பால்தாக்கரே பேரன் பரபரப்பு பேட்டி


ஏக்நாஷ் ஷிண்டே அணிக்கே எனது ஆதரவு: பால்தாக்கரே பேரன் பரபரப்பு பேட்டி
x

ஷிண்டே அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என பால் தாக்கரே பேரன் நிகர் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பால்தாக்கரேவின் பேரன் நிகர் தாக்கரே ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஷிண்டே அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " ஏக்நாத் ஷிண்டே எனது தாத்தாவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறார். எனவே நான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தேவைப்பட்டால் நான் இடைத்தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவாக இருப்பேன். " என்றார்.

நிகர் தாக்கரே பால் தாக்கரேவின் மூத்த மகன் பிந்துமாதவின் மகன் ஆவார். பிந்து மாதவ் 1996-ம் ஆண்டு நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதேபோல பால் தாக்கரேவின் மற்றொரு மகன் ஜெய்தேவ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஸ்மிதா ஆகியோரும் ஏக்நாத்ஷிண்டேக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story