ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டி பெங்களூரு வந்தது
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டி பெங்களூரு வந்தது
பெங்களூரு:
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் திரவுதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் செய்துள்ளது. இந்த தேர்தல் விதான சவுதாவில் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு தேவையான வாக்கு பெட்டி உள்பட அனைத்து பொருட்களும் நேற்று விமானம் மூலம் கர்நாடகம் வந்தன.
அந்த பொருட்கள் இரவு 8.15 மணிக்கு விமானத்தில் கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்தன. அதை மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பெற்று கொண்டார். அந்த பொருட்களை ஒரு காரில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் விதான சவுதாவுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வாக்கு பெட்டி உள்ளிட்ட பொருட்கள் முதல் மாடியில் உள்ள அறை எண் 108-ல் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.