நந்தி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை
புகழ்பெற்ற சுற்றுலா தலமான நந்தி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதித்துவிட்டு, பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
சிக்பள்ளாப்பூர்
நந்தி மலை
பெங்களூருவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நந்தி மலை. சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலை நந்தி (மாடு) படுத்திருப்பது போல் காட்சி தரும்.
அதனால் இந்த மலைக்கு நந்திமலை என பெயரிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இந்த மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது.
இங்கு 1,300 ஆண்டுகள் பழமையான திராவிட கட்டிட கலையை பறைசாற்றும் யோக நந்தீஸ்வரர் கோவில், திப்புசுல்தானின் கோடை கால அரண்மனை ஆகியவை உள்ளன.
மேலும் இந்த நந்தி மலை மீது நின்று பெங்களூரு நகரின் மொத்த கொள்ளை அழகையும் கண்களால் ரசிக்கலாம். அத்துடன் சூரியன் அஸ்தமனம், உதயமாகும் காட்சிகளை கண்டுரசிக்க சிறந்த இடமாக இந்த மலை திகழ்கிறது.
இதுதவிர மலையேற்றத்திற்கும் நந்தி மலை சிறந்த வனப்பகுதியாக உள்ளது.
வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு
இதனால் வார இறுதி நாட்களாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நந்தி மலையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள், கார்களில் தான் அதிகளவில் வருகை தருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத் துறை சார்பில் தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நந்திமலைக்கு தனியார் வாகனங்கள் அதிகளவில் வருவதால் இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் நந்தி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு
இந்த நிலையில் கர்நாடக சுற்றுலாத்துறை நந்தி மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பேட்டரி பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதனால் நந்திமலைக்கு இனி தனியார் மற்றும் தனிநபர் வாகனங்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளது.
அதாவது வரலாற்று சிறப்புமிக்க நந்திமலையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் கர்நாடக சுற்றுலாத்துறை இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், இன்னும் 6 மாதத்திற்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.