பா.ஜனதா ஆட்சியில் நடந்து வந்த வளர்ச்சி பணிகளுக்கு தடை
கர்நாடகத்தில் எந்த துறைகளுக்கும் நிதி ஒதுக்க கூடாது என்றும், பா.ஜனதா ஆட்சியில் நடந்து வந்த வளர்ச்சி பணிகளுக்கும் தடை விதித்து முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூரு:-
வளர்ச்சி பணிகளுக்கு தடை
கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி நிர்வாக பணிகளை சித்தராமையா முடுக்கி விட்டுள்ளார். தனது அலுவலகத்திற்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளில் முதலில் கவனம் செலுத்தினார். அதே நேரத்தில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க மந்திரி எம்.பி.பட்டீலுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கடந்த பா.ஜனதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த வளர்ச்சி பணிகள், திட்டங்களுக்கு தடை விதித்து முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே நேரத்தில் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்க கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
துறைகள் ஒதுக்கிய பின்பே...
மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் கீழ் வரும் வாரிய கழகங்கள், பிற அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு துறைகளின் கீழ் நடைபெற்று வந்த வளர்ச்சி பணிகளை உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் இருக்கும் முதன்மை செயலாளர்கள் மற்ற அதிகாரிகள் இதனை பின்பற்ற வேண்டிய அவசியம்.
இதுபோல், கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள், கணக்காளர்களும் இதனை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 8 மந்திரிகள் பதவி ஏற்றிருந்தாலும், அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை. எனவே மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து மந்திரிகளுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்ட பின்பே வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதுடன், துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.