இறுக்கி அணைச்சு... ! இலவச கட்டிப்புடி வைத்தியம் நடத்திய இளம்பெண்கள்


இறுக்கி அணைச்சு... ! இலவச கட்டிப்புடி வைத்தியம் நடத்திய இளம்பெண்கள்
x
தினத்தந்தி 24 Dec 2022 10:21 AM IST (Updated: 24 Dec 2022 10:23 AM IST)
t-max-icont-min-icon

ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.

பெங்களூரு:

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பலதரப்பட்ட மக்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் பெங்களூருவில் இதுபோன்ற பண்டிகைகளுக்கு என்றே எம்.ஜி.ரோடு, சர்ச் தெரு உள்பட சில முக்கிய இடங்கள் பெயர் போனவையாகும். புத்தாண்டின் முந்தைய நாள் இரவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எம்.ஜி.ரோடு, சர்ச் தெரு ஆகிய இடங்கள் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

இதற்கான ஏற்பாடுகள் அந்த பகுதியில் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளம்பெண்கள் 2 பேர் அனைவருக்கும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்து வருகின்றனர்.

பெங்களூருவை சேர்ந்தவர்கள் அபூர்வ அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் சர்ச் தெருவில், கைகளில் 'பிரீ ஹக்ஸ்' என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று அவர்களை கடந்து செல்பவர்கள் பலரையும் கட்டிப்பிடித்து வருகின்றனர்.

ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகைளில், 'சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றை கண்டதாகவும், அதில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டால், அறிவியல் ரீதியாக, மன அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது. இன்றைய நகர நாகரீக வளர்ச்சியில் ஒருவரை ஒருவர் நின்று கட்டி ஆரத்தழுவ நேரமின்றி வேலை, படிப்பு என பல்வேறு எண்ணங்களை குறிக்கோளாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்' என்றனர். இதேபோல் அந்த சாலையில் சிறிது தூரத்தில் ரகுமான் கான் என்ற மற்றொரு வாலிபர் தன்னை சிரிக்க வைக்கும் நபருக்கு ரூ.800 பரிசாக வழங்குவதாக கூறினார். கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற நூதன போட்டி நடத்தி வரும் அவரை 3 பேர் மட்டுமே சிரிக்க வைத்துள்ளதாக அவர் கூறினார்.

இதேபோல் பலரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story