பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. உடன் காங்கிரஸ் ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம்: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு
பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. உடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
புதுடெல்லி,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்து உள்ளது.
அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டு உள்ள அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை, தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது.
சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. அதுபோன்ற எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவரான சுரேந்திரா ஜெயின் கூறும்போது, பஜ்ரங் தள அமைப்பை, தேச விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.
நாட்டு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். இந்த சவாலை பஜ்ரங்தளம் ஏற்கிறது. அனைத்து ஜனநாயக வழிகளிலும் இதற்கு நாங்கள் பதிலளிப்போம் என்று தெரிவித்து உள்ளார்.