மழை, வெள்ள சேதங்கள் குறித்து15 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை
மழை, வெள்ள சேதங்கள் குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். மீட்பு-நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
பெங்களூரு: மழை, வெள்ள சேதங்கள் குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். மீட்பு-நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
ஆலோசனை
கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்கள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று 15 மாவட்ட கலெக்டர்களுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, பெண்கள்-குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார், தலைமை செயலாளர் வந்திதா சர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெங்களூரு, ராமநகர், துமகூரு, சிக்பள்ளாப்பூர், மண்டியா, மைசூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, சாம்ராஜ்நகர், ஹாசன், சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர்கள், தங்கள் மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவரித்தனர்.
மீட்பு-நிவாரண பணிகள்
இதில் பேசிய பசவராஜ் பொம்மை, "மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். வெள்ள சேதங்களை மதிப்பிட வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
தேவைப்பட்டால் நிவாரண முகாம்களை திறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும். பெங்களூருவில் கால்வாய்களில் மழைநீர் சீராக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.