பா.ஜனதா பிரசார குழு தலைவராக பசவராஜ் பொம்மை நியமனம்


பா.ஜனதா பிரசார குழு தலைவராக பசவராஜ் பொம்மை நியமனம்
x

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக பா.ஜனதா பிரசார குழு தலைவராக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு:-

சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று பல்வேறு கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. இதனால் கர்நாடகத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில் எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டதால், லிங்காயத் சமூகத்தினர் அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு மவுசு அதிகரிக்க தொடங்கியது. மேலும் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் சமீபத்தில் வெளியான வண்ணம் இருந்தது.

பசவராஜ் பொம்மை நியமனம்

இந்த நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பா.ஜனதாவின் பிரசார குழு தலைவராக முதல்-மந்திரியாக இருக்கும் பசவராஜ் பொம்மையை நியமித்து, பா.ஜனதா மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தலை சந்திப்போம் என்று ஜே.பி.நட்டா, அமித்ஷா கூறி இருந்தார்கள்.

தற்போது அவரை பிரசார குழு தலைவராக நியமித்து இருப்பதன் மூலமாக, பசவராஜ் பொம்மை தலைமையிலேயே தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகி உள்ளது. அதே நேரத்தில் பிரசார குழுவில் பசவராஜ் பொம்மைக்கு அடுத்தபடியாக எடியூரப்பாவுக்கு 2-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா ஆதரவாளர்கள் அதிருப்தி

இந்த பிரசார குழுவில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி, ஷோபா, ஈசுவரப்பா, கோவிந்த் கார்ஜோள், சி.சி.பட்டீல், ஆர்.அசோக், எஸ்.டி.சோமசேகர், சுதாகர், சி.டி.ரவி, பி.சி.மோகன், லட்சுமண் சவதி, நாராயணசாமி, சசிகலா ஜோலே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். எடியூரப்பாவுக்கு பிரசார குழு தலைவர் பதவி கிடைக்காததால், அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.


Next Story