கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி போட்டியின்றி தேர்வு


கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி போட்டியின்றி தேர்வு
x

கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பெலகாவி:

ரகுநாத்ராவ் மல்காபுரே

கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது(2019-21) கர்நாடக மேல்-சபை தலைவராக ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் பசவராஜ் ஹொரட்டியின் எம்.எல்.சி. பதவி காலம் கடந்த மே மாதம் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அவர் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். மேல்-சபை தற்காலிக தலைவராக பா.ஜனதாவை சேர்ந்த ரகுநாத்ராவ் மல்காபுரே நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற மேல்-சபை தேர்தலில் கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பசவராஜ் ஹொரட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தனக்கு மேல்-சபை தலைவர் பதவி வழங்குமாறு அவர் வலியுறுத்தி வந்தார். ஆனால், மேல்-சபை தலைவர் பதவியில் தன்னையே நீட்டிக்க வேண்டும் என்று ரகுநாத்ராவ் மல்காபுரே கேட்டு வந்தார்.

பசவராஜ் ஹொரட்டி

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் பசவராஜ் ஹொரட்டி, ரகுநாத்ராவ் மல்காபுரே ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மேல்-சபை செயலாளர், அந்த தலைவர் பதவிக்கு 21-ந் தேதி(நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

பா.ஜனதா சார்பில் பசவராஜ் ஹொரட்டி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதையடுத்து பசவராஜ் ஹொரட்டி மட்டுமே மனு தாக்கல் செய்ததை அடுத்து அவர் மேல்-சபை தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பசவராஜ் ஹொரட்டியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், எதிர்க்கட்சி தலைவா் பி.கே.ஹரிபிரசாத், ஜனதா தளம்(எஸ்) தலைவர் போஜேகவுடா ஆகியோர் சேர்ந்து அழைத்து வந்து தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

பசவராஜ் பொம்மை

அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை பேசுகையில், 'மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்த சபையின் கவுரவத்தை அதிகரிப்பதாக உள்ளது. பசவராஜ் ஹொரட்டி அனைத்துக் கட்சியினரிடமும் அன்பாக பழக கூடியவர். தனக்கு உரிய ரீதியில் சேவையாற்றி வந்துள்ளார். தற்போது மேல்-சபை தலைவராக அவர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆசிரியா் பணியை தொடர்ந்து அரசியலுக்கு வந்து நீண்ட காலம், எம்.எல்.சி.யாக பணியாற்றி வருகிறார். தற்போது இந்த சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பணி சிறக்க எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் பேசும்போது, 'அரசியல் அமைப்பு சட்டத்தை நன்கு படித்தவர், இந்த சபையை சரியான முறையில் நடத்திய அனுபவம் உள்ளவர். இந்த சபையின் உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்' என்றார்.

கவுரவத்தை காப்பாற்றுவீர்கள்

அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் போஜேகவுடா, 'உங்களின் அனுபவத்தின் அடிப்படையில் இந்த சபையை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த சபையின் கவுரவத்தை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த சபையில் நடைபெறும் விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்' என்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்களும் பேசினர்.

3-வது முறையாக மேல்-சபை தலைவர்

பசவராஜ் ஹொரட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வட மேற்கு ஆசிரியர் தொகுதியில் இருந்து 7 முறை மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு முதல் முறையாக அதே தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.சி. ஆனார். ஆகமொத்தம் அவர் மேல்-சபைக்கு 8-வது முறையாக எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஏற்கனவே 2 முறை மேல்-சபை தலைவராக இருந்துள்ளார். தற்போது 3-வது முறையாக மேல்-சபை தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலில் மூத்த தலைவரான அவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுடன் அவர் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story